அனாதேயக் கடிதம் வாங்கித் தந்த தண்டனை!

அனாதேயக் கடிதம் வாங்கித் தந்த தண்டனை!
Published on

ராமச்சந்திர சத்ரபதி  என்ற பத்திரிகையாளர் நான்கே பக்கங்கள் கொண்ட ஒரு இந்தி மொழி செய்தித்தாளை ஹரியானாவில் உள்ள சிர்ஸா பகுதியில் நடத்தி வந்தார். அது சக்திவாய்ந்த மத அமைப்பான தேரா சச்சா சவுதாவின் தலைமையகம் இருக்கும் ஊர். அந்த அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ரஹீம் மிகவும்    சக்தி வாய்ந்த அதிகார மனிதர்.

2002-ல் சத்ரபதியின் பத்திரிகையில் வெளியான ஒரு கடிதம் அப்பகுதியையும் பின்னர் வட இந்தியாவையும் உலுக்கியது பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் துறவி, தேரா சச்சா சவுதாவைச் சேர்ந்தவர். அவர் பிரதமர், மாநில நீதிபதி உள்ளிட்ட பலருக்கு எழுதிய கடிதம் அது. அக்கடிதம் தேரா சச்சா சவுதாவின் தலைவரான பாபாவும் அவரது பக்தர்களால் கடவுளாக கருதப்படுபவருமான குர்மீத் சிங் தன்னையும் அவரது ஆசிரமத்தில் இருக்கும் மற்ற பெண்களையும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியது. தங்கள் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்களாக இருப்பதால் இதை நம்ப மறுப்பதாகவும் பாபாவின் அதிகார பலத்துக்கு முன்னால் யாராலும் எதுவும் செய்யமுடியாத நிலை இருப்பதாகவும்  அக்கடிதம் சொன்னது!

இக்கடிதம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. பிற பத்திரிகைகளும் அதை வெளியிட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி, இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது!

கடிதத்தை எழுதிய பெண்கள் யார் என்று தேடிப்பிடித்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினால் பாபாவை பஞ்சர் ஆக்கிவிடலாம் என்று தேடியது சிபிஐ. ராமச்சந்திர சத்ரபதிக்கு அது யார் என்று தெரியும். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்கு முன்பாக அவரது வீட்டுக்கு முன்பே யாரோ அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்! யார் சுட்டிருப்பார்கள் என்ற கேள்விக்கு விடைகள் எங்கு நோக்கி நீளும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை! ஆனால் பாபா சக்தி வாய்ந்தவர். அவரிடம் பணம் வாங்காத, உதவி கேட்காத அதிகார வர்க்கத்தினர் யாருமே இல்லை! காங்கிரசும் பின்னர் பாஜகவும் தேர்தலில் ஜெயிக்க அவர் ஆதரவை நாடுவது வழக்கம்! பாபாவின் சம்மந்தி, காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாப்பில் அமைச்சராக வேறு இருந்தவர்.

சிபிஐ விசாரணைக்கு உடனே நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது பாபா தரப்பு. இரு ஆண்டுகள் கழித்து இந்த தடையாணையை நீக்கச்செய்த சிபிஐ மேலும் சுறுசுறுப்பாக களமிறங்கி, கடிதம் எழுதிய பெண்ணைக் கண்டுபிடித்தது. ஒருவர் அல்ல. அது இருவர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். அதை வைத்துத்தான் பாபாவுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டை நிரூபித்திருக்கிறது சிபிஐ.

2009-ல் இவர்களில் ஒரு பெண் நீதிபதியிடம் தான் பாபாவால் கற்பழிக்கப்பட்டது பற்றி கொடுத்த வாக்குமூலம் பற்றி பத்திரிகைகளில் வந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாபா ஆசிரமத்தில் அண்டர் கிரவுண்டில் இருக்கும் குஃபா என்று அழைக்கப்படும் அறையில் வசித்தார். இந்த பெண்ணிடம் பிற சாத்விகள் உனக்கு பிதாஜி, மாஃபி கொடுத்துவிட்டாரா என்று அடிக்கடி கேட்டார்களாம்! பிதாஜி என்றால் பாபா. மாஃபி என்றால் எதற்கு கோட் வேர்ட் என்று அவருக்கு முதலில் புரியவில்லை. 1999 ஆம் ஆண்டு ஒருநாள் இவர் இரவு பாபாவின் அறைக்கு அழைக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டி வன்புணர்வு செய்யப்பட்ட பின்னரே மாஃபி என்றால் என்னவென்று புரிந்தது  என்று தன் வாக்குமூலத்தில் அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இடையில் தேராவில் நிர்வாகியாகப் பணிபுரிந்த ரஞ்சித் சிங் என்பவர் தான் தன் தங்கையை வைத்து கடிதம் எழுதச்செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் அவரையும் போட்டுத்தள்ளிய கொடூரமும் நிகழ்ந்தது!

வழக்குப் பதிவு செய்து பதினைந்து ஆண்டுகள் கழித்துத்தான் தீர்ப்பு வந்துள்ளது! 20 ஆண்டு சிறை. தலா 15 லட்சம் அபராதம்! தன்னை மன்னிக்குமாறு நீதிபதியிடம் பாபா கண்ணீர்விட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன!

பாபாவுக்கு எதிரான கடிதத்தை அதுவும் பெயரிடப்படாத அந்த அனாமதேயக் கடிதத்தை வெளியிட பெரும் துணிச்சல் வேண்டும்! அக்கடிதம் வெளியிடப்படாமல் போயிருந்தால் உண்மை வெளியே வராமலே போயிருக்கலாம்! பிரதமர்களுக்கும் நீதிபதிகளுக்கும் தினந்தோறும் ஆயிரம் அனாமதேயக் கடிதங்களாவது இந்தியா போன்ற நாட்டில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சத்ரபதிக்கு அந்த கடிதம் உண்மை என்று தெரிந்திருந்தது. யார் எழுதியது என்றும் தெரிந்திருக்கவேண்டும். எனவேதான் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தபின்னும் அந்த கடிதத்தை வெளியிட்டார். அதற்காக உயிரையும் கொடுத்தார்! இவரது கொலை வழக்கும் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது! அவரது குடும்பத்தினர் இந்த வழக்கிலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சத்ரபதியின் பத்திரிகையின் பெயர் ‘பூரா சச்!’  (தமிழில் ‘முழுவதும் உண்மை’ என்று அர்த்தம்!).

செப்டெம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com